A.Muttulingam
முகப்பு | தொடர்புகளுக்கு
புதிய பதிவுகள்
. தாய்மொழி நாள ...
. புகழுமாறு ஒன ...
. ஆஸ்கார் விரு ...
. தீர்வு ...
. பரிசு அறிவித ...
. ஓ ...
. ஆற்றேன் அடிய ...
. கடிதம் ...
. எஸ்.ராமகிருஷ ...
. யானையின் படி ...
. மனுஷ்யபுத்தி ...
. காயத்ரி சித் ...
. மறதி ...
.  இயல் விருது ...
. கடிதம் ...
. விகடன் ...
. அறிவிப்பு 3 ...
. அறிவிப்பு ...
. அறிவிப்பு 2 ...
. திட்டமிடாத க ...
சமீபத்திய ஆக்கம்:  தாய்மொழி நாள் (நாட்குறிப்புகள்)
2012-02-21

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் (பிப்ரவரி 2010) 85 வயது மூதாட்டி ஒருவர் அந்தமான் தீவில் இறந்துபோனார். அவர் இறந்தபோது அவர் பேசிய மொழியும் இறந்துபோனது. இன்று அதைப் பேச ஒருவரும் இல்லை. அந்த மொழியில் அப்படி என்ன சிறப்பு என்றால் அது 65,000 வருடம் தொன்மையானது. அந்தப் பெண் இறந்தபோது அத்தனை வருடங்கள் வாழ்ந்த மொழி ஒரேயடியாக அழிந்துவிட்டது.

 

இன்று உலகத் தாய்மொழி நாள். தமிழ் உலக மொழிகளில் 15வது இடத்தில் இருக்கிறது. ஒருநாள் எங்கள் மொழியும் அழிந்துபோகுமா என்ற பயம் எல்லோரிடமும் தொற்றிக்கொண்டுள்ளது. ஆனால் இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில் ஒரு மொழியை அழிப்பது அவ்வளவு சுலபமல்ல. தமிழ் தொடர்ந்து வாழ தமிழ் மொழி பேசுபவர்கள் கொஞ்சம் உதவி செய்யவேண்டும். வேறு ஒன்றுமே இல்லை.

 

நான் சமீபத்தில் ஒரு சிறுகதையில் ’சப்பாத்து’ என்று எழுதிவிட்டேன். தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் எழுதிக் கேட்டார். ‘அது என்ன சப்பாத்து?’ நான் பதில் எழுதினேன். அவர் விடவில்லை. தொடர்ந்து ‘ஷூ என்று எழுதியிருக்கலாமே’ என அறிவுரை வழங்கினார். சப்பாத்து என்ற வார்த்தை தமிழ் அகராதியில் இருக்கிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் ஆங்கில – தமிழ் – ஆங்கில அகராதியில் ’சப்பாத்து என்று பதிந்தால் பதில் ’shoe’ என்று வருகிறது. ஆனாலும் அந்த வாசகருக்கு தெரியவில்லை. அறியும் ஆவலும் இல்லை.

 

ஒருமுறை சென்னையில் நான் ‘உப்பு’ என்று கடைக்காரரிடம் கேட்டேன். அவருக்கு புரியவில்லை. அவருக்கு பக்கத்தில் இருந்தவர்களுக்கும் தெரியவில்லை. பலதடவை சொல்லியும் அவருக்கு தெரியாததால் அதைச் சுட்டிக் காட்டினேன். அவர் ‘ஓ, சால்ட்டா? தமிழில் கேட்டிருக்கலாமே?’ என்றார். சங்க இலக்கியங்களில் உப்பு என்ற வார்த்தை பாடலுக்கு பாடல் வருகிறது. உப்பு வண்டிகள் வீதிகளில் உப்பு கொட்டிக்கொண்டு போவதைப்பற்றி வர்ணனைகள் இருக்கின்றன. உப்பு வியாபாரிகளுக்கு உமணன் உமட்டியர் என்ற பெயர்களும் உண்டு. இன்று அந்த வார்த்தையே அழிந்துகொண்டு வருகிறது. முதலில் ஒவ்வொரு வார்த்தையாக மறையும். பின்னர் மொழி அழியும். செங்கல் செங்கல்லாக அகற்றி ஒரு கட்டிடத்தை உடைப்பதுபோல.

 

இந்த இணைய உலகில் நாங்கள் பெரிதாக ஒன்றுமே செய்யத் தேவை இல்லை. உங்கள் இணைய தளத்திலோ, வலைப்பூவிலோ, நீங்கள் எழுதும் மின்னஞ்சலிலோ, குறுஞ்செய்தியிலோ, முகப்புத்தகத்திலோ, துரிதரிலோ ஒருநாளைக்கு சில தமிழ் வார்த்தைகளை எழுதி விடுங்கள். இன்னும் மேலாக தமிழ் வார்த்தைகளை குரலாகப் பதிவுசெய்து காணொளியாக உலவவிடுங்கள். இது இணைய வெளியில் உயிர்வாழும்.  உங்கள் காலத்துக்கு  பின்னரும் கிரகங்கள்போல என்றும் சுற்றிக்கொண்டிருக்கும்.

 

அந்தமான் மூதாட்டியின் மொழிக்கு நேர்ந்த கதி தமிழுக்கு ஏற்படக்கூடாது. நாங்கள்தான் அதைச் செய்யவேண்டும். இன்னொரு மொழிக்காரர் வந்து எங்களுக்காக அதை செய்யப்போவதில்லை.

END

என்னைப்பற்றி - About Me

A.Muttu இலங்கையில், கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டர்ட் மனெஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்திசெய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்து, 2000 ஆண்டில் ஓய்வுபெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.


அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல் என எழுதியிருக்கிறேன்.


இதுவரை வெளிவந்த நூல்கள் :


     1. அக்கா - 1964
     2. திகடசக்கரம் - 1995
     3. வம்சவிருத்தி - 1996
     4. வடக்குவீதி - 1998
     5. மகாராஜாவின் ரயில்வண்டி - 2001
     6. அ.முத்துலிங்கம் கதைகள் - 2004
     7. அங்கே இப்ப என்ன நேரம் ? - 2005
     8. வியத்தலும் இலமே - 2006
     9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது - 2006
     10. பூமியின் பாதி வயது - 2007
     11. உண்மை கலந்த நாட்குறிப்புகள் - 2008
     12. அ.முத்துலிங்கம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம் - 2008
     13. Inauspicious Times - 2008
     14. அமெரிக்கக்காரி - 2009
     15. அமெரிக்க உளவாளி - 2010

பார்வையாளர்களின் எண்ணிக்கை Counter
Copyright © 2011 A.Muthulingam. All rights reserved. Powered by Spark Vision Media